ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்று(மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அந்த நபரை பத்திரமாக வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் இன்று(மார்ச் .10) மீட்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா கூறியதாவது, உயிரிழந்த நபர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதும், அவர் எவ்வாறு ஆழ்துளைக் கிணறு அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார் என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நெடுநேரமாகப் போராடி மீட்புப் பணியில் தங்களால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.