பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்
பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார்.
தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும் பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா மேலும் தெரிவிக்கையில்.
5 அடி குறைந்திருக்கிறது
“ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கால்வாயின் நீர்மட்டம் குறைவது இயல்பு என்றாலும், இன்னும் கோடை காலம் கூட ஆரம்பிக்காத நிலையில், இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே தென்படுகின்றன.
மேலும், காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்திருக்கிறது, கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் இந்த வறட்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.
கடந்த ஒக்டோபர் (2023) மாதம்தான் முதன்முறையாக கால்வாய் வறண்டது, அதனைத் தொடர்ந்து, தற்போது இயல்பைவிட 41 சதவிகிதம் குறைவாக மழை பொழிந்திருக்கிறது, இதனால், அமெரிக்க – பசிபிக் வழித்தடத்தில், 270 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
குடிநீர் விநியோகம்
அதுமாத்திரமன்றி தற்போது, ஒரு நாளைக்கு கால்வாயைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஒவ்வொரு கப்பலும் குறைந்தளவு சரக்குகளையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது இது உலக வர்த்தகத்தில் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்த நாட்டின் பாதி மக்கள் தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது, எனவே, இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு இந்த வறட்சி தொடர் தண்ணீர் சிக்கலை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.