பறக்கும் விமானத்தில் தூங்கி வழிந்த விமானிகள்… திகிலடைய வைத்த 28 நிமிடங்கள்: 153 பயணிகளின் நிலை
இந்தோனேசியாவின் Batik விமானத்தின் விமானிகள் இருவர், மொத்த பயணிகளுடன் நடுவானில் தூங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து திகிலை ஏற்படுத்தியுள்ளது.
விமானிகள் இருவரும் தூக்கத்தில்
சுமார் 28 நிமிடங்கள் அந்த விமானிகள் இருவரும் தூக்கத்தில் இருந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஜனவரி 25ம் திகதி குறித்த விமானமானது தென்கிழக்கு சுலவேசியிலிருந்து இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிற்கு பயணப்பட்டுள்ளது.
2 மணி 35 நிமிட விமானப் பயணத்தில், அந்த விமானிகள் சுமார் 28 நிமிடங்கள் தூங்கியுள்ளனர். ஆனால் அந்த விமானத்தில் பயணித்த 153 பயணிகளுக்கோ 4 ஊழியர்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேரவில்லை என்றே விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு போக்குவரத்து அமைச்சகத்தின் பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம் பாடிக் ஏர் நிறுவனத்தை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் விமான ஊழியர்களின் ஓய்வு நேரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு விமான நிறுவனங்களை வலியுறுத்தியது.
வெளியான தகவலில், விமானம் புறப்படும் முன்னர் முதன்மை விமானி தமக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்றும், இதனால் விமானம் புறப்பட்ட பின்னர் 90 நிமிடங்கள் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில்
இதற்கு சக விமானி அனுமதியும் அளித்துள்ளார். விமானி தூங்க சென்ற நிலையில், சக விமானியின் கட்டுப்பாட்டில் விமானம் சென்றுள்ளது. ஆனால் அந்த சக விமானியும் ஒருகட்டத்தில் தூங்கிப் போயுள்ளார்.
உண்மையில் சக விமானியும் போதிய ஓய்வின்றியே பணிக்கு திரும்பியுள்ளார். அவரது இரட்டைக் குழந்தைகளை கவனிக்கும் மனைவிக்கு அவர் உதவி செய்துள்ளார். இரு விமானிகளும் தூக்கத்தில் இருந்த நேரத்தில் ஜகார்த்தா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்புகொள்ள முயன்றுள்ளனர்.
ஆனால் பதிலேதும் தரப்படவில்லை. சுமார் 28 நிமிடங்களுக்கு பின்னர் திடீரென்று கண் விழித்த விமானி அதிர்ந்து போயுள்ளார். விமானம் அப்போது உரிய பாதையில் இருந்து விலகி பறந்துகொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக உடனையே விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
உடனையே, தூக்கத்தில் இருந்த சக விமானியையும் எழுப்பியுள்ளார். அதன் பின்னரே ஜகார்த்தா கட்டுப்பாட்டு அறைக்கு பதிலளித்துள்ளார். தூங்கிய விவகாரத்தில் சிக்கிய இரு விமானிகள் மற்றும் ஊழியர்களை விசாரணை முடியும் மட்டும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.