தில்லி: அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் 2 நாள்களுக்குள் மூட உத்தரவு!
மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்றுமுன் தினம் (மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அந்த நபரை பத்திரமாக வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த நபர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் நேற்று (மார்ச் .10) பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தில்லியில் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சுமார் 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தில்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்துளைக் கிணற்றில் மனிதர்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, தில்லியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா உத்தரவிட்டுள்ளார். திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.