பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்
பிரித்தானியாவின் டெவான் பகுதியில் அமைந்துள்ள HMP Dartmoor சிறைச்சாலை தற்போது கவலைக்கிடமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
சிறைச்சாலையில் கதிரியக்க வாயு
பிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், ரேடான் என்ற நிறமற்ற, மணமற்ற கதிரியக்க வாயுவின் அளவு(radioactive gas) அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 184 சிறை அறைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 200 கைதிகள் வேறு சிறைகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரேடான்(radon) அளவை நிரந்தரமாக குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த இடமாற்றங்கள் தற்காலிகமானவை என்று சிறைச்சாலை துறை உறுதியளித்துள்ளது.
ரேடான் என்றால் என்ன?
ரேடான் என்பது பாறைகள் மற்றும் மண்ணில் உள்ள யுரேனியம் சிதைவதால் உருவாகும் இயற்கையாக காணப்படும் வாயு.
குறைந்த அளவு வெளிப்பாடு பொதுவாக பெரிய ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தாது, ஆனால் அதிகரித்த அளவிற்கு மத்தியில் நீண்ட நேரம் இருப்பது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
விமர்சகர்கள் கேள்வி
HMP Dartmoor சிறையில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலை, நிகழ்வுகளின் கால அளவை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சில அறிக்கைகளின்படி, 2020 ஆம் ஆண்டிலேயே சிறையில் ரேடான் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் இந்த பிரச்சினையை கையாள்வதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டனர் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சிறைச்சாலை துறை உறுதி
ரேடான் அளவை நிரந்தரமாகக் குறைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், பாதுகாப்பானது என கருதப்பட்டதும் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் மீண்டும் அந்த வளாகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.