காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா
காசாவில் பகுதியில் மனிதாபிமான உதவிப் பொருட்களை வழங்குவதற்காக தற்காலிக துறைமுகத்தை கட்டும் பணியில் ஈடுபட அமெரிக்க இராணுவ கப்பல் மத்திய தரைக்கடலை நோக்கி பயணித்து வருகிறது.
தற்காலிக துறைமுகம்
நீடித்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடவடிக்கை காரணமாக காசா பகுதியில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை என்ற கடுமையான நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பரவலான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
அதே சமயம், இஸ்ரேலிய தடை காரணமாக நிலவழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து மூலம் உதவிப் பொருட்களை வழங்குவதில் சிக்கல் நிலவருகிறது.
இந்த சிக்கலைக் களைவதற்காகவே காசா கடற்கரையில் தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நாட்டு மக்களுக்கு சமீபத்தில் ஆற்றிய உரையில், கப்பல் மூலம் உணவு, குடிநீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் போன்ற உதவிப் பொருட்களை வழங்குவதற்காக மத்திய தரைக்கடல் பகுதியான காசா கடற்கரையில் தற்காலிக துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த 36 மணி நேரங்களுக்குள், காசா கடற்கரையில் தற்காலிக துறைமுகம் கட்டும் பணிகளை தொடங்குவதற்காக உபகரணங்களை ஏற்றிக் கொண்டு General Frank S. Besson என்ற கப்பல் விர்ஜினியாவில்(Virginia) உள்ள அமெரிக்க தளத்திலிருந்து புறப்பட்டது.
எத்தனை நாட்களில் துறைமுகம் கட்டி முடிக்கப்படும்?
சுமார் 60 நாட்கள் வரை கட்டுமான பணிகள் நீடிக்கும் எனவும், 1000 வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் (Patrick Ryder) தெரிவித்தார்.
மேலும் ராணுவ படைகள் கப்பலில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும், காசா பகுதிக்குள் நுழைய மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.