இலங்கையில் புதிதாக பரவி வரும் மற்றுமொரு போதைப்பொருள்
இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ சிகரட் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தெடர்பில் கருத்து வெளியிட்ட மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு வியாபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈசிகரட் பயன்பாடு பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, பாணந்துறை போன்ற பகுதிகளில் அதிகளவானவர்கள் ஈ-சிகரட் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் மாணவர் ஒருவர் ஈ-சிகரட் புகைப்பதற்கு வழங்கி கட்டணம் அறவீடு செய்த சம்பவமொன்று பதிவாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இணைய விற்பனை தளங்களின் ஊடாக ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உடல் நலனுக்கு தீங்கு
கைக்கடிகாரங்கள், பவர் பேங்குகள், பென் ட்ரைவ்கள், சென்ட் போத்தல்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக இவ்வாறு ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாம்பழம், ஓரேஞ்ச், செர்ரீ மற்றும் ஸ்டோபரி போன்ற பழ வாசனைகளுடன் இந்த ஈ-சிகரட் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஈசிகரட் வகைகள் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் எனவும் சில நாடுகளில் இவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஈ-சிகரட் வகைகள் விமான நிலையத்தின் ஊடாகவும் கடல் மார்க்கமாகவும் இலங்கைக்குள் கடத்தப்படுவதாக குணசிறி தெரிவித்துள்ளார்.