முல்லைத்தீவு – குமுழமுனை வீதியில் அச்சம் தரும் மரங்களை அகற்ற மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு – குமுழமுனையின் பிரதான வீதிகளில் ஒன்றின் முச்சந்தியில் அமைந்துள்ள இரண்டு பட்டமரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மரங்கள் முழமுனை 6ஆம் வட்டாரத்தில் உள்ள மகளிர் சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கச் சந்தி என அழைக்கப்படக்கூடிய முச்சந்தியில் கிளைகளோடு கூடிய பெரிய பட்டமும் கிளைகளற்ற பிரதான தண்டு மட்டுமுள்ள மற்றொரு பட்டமரமும் காணப்படுகின்றன.
மக்களது கோரிக்கை
தண்ணீரூற்று, குமுழமுனை பிரதான வீதியில் இருந்து ஆறு முகத்தான் குளத்துக்கான பிரதான பேரூந்து வீதியிலேயே இந்த அச்சத்தை ஏற்படுத்தும் பட்டமரங்கள் காணப்படுகின்ற நிலையில் பேருந்துப் பயணம் மற்றும் மக்கள் பயணிக்கும் இந்த வீதியில் பட்டமரங்கள் நிற்பது ஆபத்தினை விளைவிக்க கூடியது என தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ட மரங்கள் நீண்ட காலமாக இருப்பதால் இவை உக்கலடைந்து அடியோடு சாய்ந்து விழும் போது எதிர்பாராத விபத்துக்களையும் சேதத்தினையும் ஏற்படுத்தி விடும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தும் முன்னர் பட்ட மரங்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.