சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில்: பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்!
நாடு முழுவதும் ரூ.85,000 கோடிக்கு அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (மாா்ச் 12) காலை தொடக்கி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-மைசூரு இடையேயான 2-ஆவது வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் ஏப். 4 ஆம் தேதி வரை பெங்களூரு வரை இயக்கப்படும் என்றும், ஏப். 5 ஆம் முதல் மைசூரு வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னெள-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, தில்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னெள-பாட்னா, அகமதாபாத்-மும்பை, புரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடக்கி வைத்தார்.
மேலும், திருவனந்தபுரம் – காசா்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை மங்களூா் வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடக்கி வைத்தார் பிரதமர்.
இதுதவிர, கொல்லம் – திருப்பதி விரைவு ரயில் சேவையைத் தொடக்கி வைத்த அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ (விற்பனை) அரங்குகளையும் பிரதமர் திறந்து வைத்தார்.