;
Athirady Tamil News

யாழில் இளைஞன் படுகொலை – கொலையாளிகளின் மூவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார்

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவரை அடையாளம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் கணவன் மனைவி இருவரையும் வாகனத்தில் கடத்தி சென்றனர்.

கணவனை ஒரு வாகனத்திலும் , மற்றைய வாகனத்தில் மனைவியையும் கடத்தி சென்ற வன்முறை கும்பல் , மாணவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.

கணவனை கடத்தி சென்றவர்கள் , வாகனத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் மேற்கொன்டதுடன் , வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு , வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்பாக படுகாயங்களுடன் இளைஞனை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இளைஞனை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள் , நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை அராலி பகுதியில் இறக்கி விடப்பட்ட மனைவி அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னையும் , தனது கணவரையும் இரு வாகனங்களில் கடத்தி சென்றனர் என முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வட்டுக்கோட்டை பொலிஸார் , கடத்தலில் ஈடுபட்ட மூவரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலயம் ஒன்றில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இரு இளைஞனர்கள் காயமடைந்திருந்தனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இளைஞனே தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாகவும் , அதற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.