மட்டக்களப்பில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம்: முன்னெடுக்கப்படும் தீ்ர்வுகள்
மட்டக்களப்பு – வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கந்தன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
வாகரையில் ஆதிவாசிகள் கிராமத்தில் இன்று (12.03.2024) இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்நிகழ்வில் குறித்த வேடுவ ஆதிவாசிகள் கிராமத்திலுள்ள மக்களின் காணியில்லாப் பிரச்சினைகளுக்கு நிர்வாக மட்டத்தில் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு செயற்பாடுகள்
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் கே.குருநாதன், வாகரைப் பிரதேச சிறுவர் மேம்பாட்டு உரிமைகள் அலுவலர் பி.எம்.எம்.காசிம் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சதீஷ்காந்த் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த பல தசாப்தங்களாக பின்தங்கிய கிராம மக்களின் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு மற்றும் பெண்கள் சிறுவர் உரிமைகள் போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.