போரால் உக்ரைன் கல்வி நிறுவனங்களில் பெருத்த பொருட்சேதம் -ஐ.நா. அறிக்கையில் தகவல்
உக்ரைனில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் குடியிருப்பு வளாகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீரேற்றும் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எனப் பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதும் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதல்களால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது.
அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் தாக்குதல்களில் பலத்த சேதமடைந்துள்ளதாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனிடையே, உக்ரைனில் அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட அணுசக்தி துறையில் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய உபகரணங்கள் பல மாயமாகியுள்ளன. இதன் காரணமாக அறிவியல், அணுசக்தி துறை, மென்பொருள் துறை உள்ளிட்ட பல துறைகளில் முக்கியப் பங்களிப்பு அளித்து வந்தது உக்ரைனின் தற்போதையை நிலை பரிதாபகரமாக உள்ளது.
அந்நாட்டின் 177 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1,443க்கும் மேற்பட்ட அறிவியல் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. கல்வி நிறுவனங்களில் இருந்த அறிவியல் உள்கட்டமைப்புகளும், அங்குள்ள பல்வேறு அறிவியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவற்றை சீரமைக்க சுமார் 121 கோடி டாலர்கள் தேவைப்படுமென்று ஐ.நா.வின் கலாசாரம் மற்றும் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் 341 கலாசார தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கலாசார மற்றும் சுற்றுலாத் துறையில் 1,900 கோடி டாலர்கள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றை சீரமைக்க 900 கோடி டாலர்கள் தேவைப்படுமென்று ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.