;
Athirady Tamil News

செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு

0

புது தில்லி, மார்ச் 12: “ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும்’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் அப்போதைய ஹைதராபாத் பகுதிக்கு விடுதலை கிடைக்கவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியால் “ஆபரேஷன் போலோ’ என்று பெயரிலான காவல் துறையினரின் நடவடிக்கை மூலம் 13 மாதங்களுக்குப் பிறகு 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் மாநிலத்துக்கு நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது.

இதை நினைவுகூரும் விதமாக, செப்டம்பர் 17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை தினமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையிலும், இளைஞர்கள் மனதில் தேசப்பற்றை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் அல்லது தனி நாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெற்ற பிரிவினைவாத போராட்டம் காரணமாக அப்பகுதி இந்தியாவுடன் இணைவதில் தாமதம் ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.