இந்தோனேசியாவில் நிலச்சரிவால் உயரும் பலி எண்ணிக்கை! தப்பியோடிய 70,000 மக்கள்
இந்தோனேசிய தீவில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர்.
நெருக்கடி நிலை
1,500க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், வழிபாட்டு தலங்கள் நாசமாகின. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், அங்குள்ள 5 பகுதிகளில் பேரிடருக்கான நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 70,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்தனர்.
பலி எண்ணிக்கை
இதற்கிடையில் காணாமல் போன பலரை தேடும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலியானதாக முன்னர் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு கழகம் தெரிவித்துள்ளது.