இறுதி கிரியைகளுக்கு தயாரான சடலத்தை ஒப்படைக்க உத்தரவு!
மனைவி வழங்கிய முறைப்பாட்டி அடுத்து பொரளை பிரபல மலர்சாலையில் ஒன்றில் இறுதி கிரியைகளுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சடலமொன்றை, பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனைவி முறைப்பாடு
தமது கணவர் மூன்று மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தமது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உயிரிழந்தவரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
அவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இந்த சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். இதன்படி சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை பிரேத அறையில் வைக்க உறவினர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை சந்தேகத்துக்குரிய மரணம் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த 64 வயதுடைய நபர் நீண்டகால சிறுநீரகம் மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவரெனவும், உயிரிழந்தவரின் சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க சடலம் அடங்கிய பெட்டி முத்திரையிட்டு மூடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.