கல்வித்துறையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி : அதிகரிக்கவுள்ள ஆசிரியர் பற்றாக்குறை
நாட்டில் தற்போது உள்ள 46,000 ஆசிரியர் பற்றாக்குறை 2025 இறுதிக்குள் 85,000 ஆக அதிகரிக்கலாம் என ஆசிரியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 75,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், சுமார் 5,000 ஆசிரியர்கள் நாட்டை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ஆசிரியர்கள்
மேலும், பலர் சேவையை விட்டு நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவித்த அவர், இந்த கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையினால் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் தொழில் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிலைமை மேலும் மோசமாகும்
இந்நிலைமையால் வயதை எட்டும் முன்னரே ஓய்வு பெற நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக ஆசிரியர் சேவையில் அத்தியாவசிய இடமாற்றங்கள் பல முடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச சேவையில் அனைத்து ஆட்சேர்ப்புகளையும் அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளதால் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.