இந்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமெரிக்க ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்
இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு
அதன்படி, சீனப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும் என்பதுடன் , ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
அடிப்படைச் சம்பளம்
அத்தோடு, இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 சதவீதம் அதிகம், சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 சதவீதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.
அதேவேளை, உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும் இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என தெரிவிக்கப்படுகிறது.