பம்பலப்பிட்டி இந்துவை இன்னிங்ஸால் துவம்சம் செய்தது யாழ். இந்து
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (16) நிறைவடைந்த 13ஆவது இந்துக்களின் சமரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துவை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் யாழ். இந்து அமோக வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமர் 3 – 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் சமநிலை அடைந்துள்ளது.
யாழ். இந்துவின் வெற்றியில் சுதர்சன் சுபர்மன், யோகாலன் சாருஜன் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள், கிருஷ்ணராஜன் பரெஷித், தினேஸ் ராமன் பிரேமிகன், ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள், குமனன் தரனிசன், ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன பிரதான பங்காற்றின.
முதல் இன்னிங்ஸில் 80 ஓட்டங்களுக்கு சுருண்ட பம்பலப்பிட்டி இந்து, இரண்டாவது இன்னிங்ஸில் அதனை விட மோசமாகத் துடுப்பெடுத்தாடி 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வி அடைந்தது.
பம்பலப்பிட்டி இந்து அணியின் 2ஆவது இன்னிங்ஸில் ராமராஜ் டிலோஜன் மாத்திரமே நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
அடித்தாடுவதை விடுத்து தடுத்தாடுவதில் கூடுதல் கவனம் செலுத்தியதாலேயே பம்பலப்பிட்டி இந்து துடுப்பாட்ட வீரர்கள் தங்களது விக்கெட்களைத் தாரைவார்த்தனர். அவர்களில் ஐவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பம்பலப்பிட்டி இந்துவை 80 ஓட்டங்களுக்கு சுருட்டிய யாழ். இந்து முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ். இந்து 8 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.
முதல் இன்னிங்ஸில் 160 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பம்பலப்பட்டி இந்து 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
எண்ணிக்கை சுருக்கம்
பம்பலப்பிட்டி இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 80 (முத்துக்குமார் அபிஷேக் 14, ஸ்ரீ நிதிர்சன் 12, ராமராஜ் டிலோஜன் 11, பாலா தாருஞ்சன் 10, உதிரிகள் 13, சுதர்சன் சுபர்னன் 14-5-20-3, ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் 17-5-36-3, யோகாலன் சாருஜன் 9.1-6-3-2)
யாழ். இந்து 1ஆவது இன்: 240 – 8 விக். டிக்ளயாட் (கிருஷ்ணராஜன் பரெஷித் 46, தினேஸ் ராமன் பிரேமிகன் 43, சுதர்சன் சுபர்னன் 31, யோகாலன் சாருஜன் 28 ஆ.இ., ஜெகதீசன் பவனன் 26, முத்துக்குமார் அபிஷேக் 19-2 விக்., திவாகரன் யாதவ் 29-2 விக்., ஸ்ரீ நிதுசன் 71 – 2 விக்.)
பம்பலப்பிட்டி இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 60 (ராமராஜன் டிலோஜன் 28, சுதர்சன் சுபர்னன் 9-6-5-4, குமனன் தரணிசன் 9-3-18-4, ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் 8-3-16-2)
விசேட விருதுகள்:
சிறந்த களத்தடுப்பாளர்: தினேஸ் ராமன் பிரேமிகன் (யாழ். இந்து)
சிறந்த பந்துவீச்சாளர்: குமனன் தரணிசன் (யாழ். இந்து),
சிறந்த துடுப்பாட்டவீரர்: கிருஷ்ணராஜன் பரெஷித் (யாழ். இந்து)
ஆட்டநாயன்: சுதர்சன் சுபர்னன் (யாழ். இந்து)