கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை
கனடாவின் டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி கார் திருட்டை தடுக்க கார் சாவியை காரினுள்ளோ அல்லது வீட்டின் முகப்பிலோ தொங்கவிடுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கார் திருட்டு
கனடாவின் டொராண்டோ நகரின் புள்ளிவிவரத்தின் படி, கடந்த ஆண்டுகளைவிட 2023ம் ஆண்டில் கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் கார் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. அதிலும் காரை மட்டும் திருடவந்த திருடர்கள் மேலதிகமாக வீடுகளில் புகுந்து பொருட்களை திருடிச் செல்வது, கடந்த ஆண்டுகளை விட 400 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காவல்துறையினர் தெரிவிக்கும் விடயம் , ‘காரை திருடவரும் திருடர்கள் கார் சாவியை தேடுவதற்காக உரிமையாளர்களின் வீட்டிற்குள் நுழைகின்ற போது வீட்டின் பொருள்களையும் சேர்த்து திருடி செல்கின்றனர்’ என்கின்றனர்.
கார் சாவியை காரிலோ அல்லது வீட்டின் முகப்பிலோ
எனவே கார் சாவியை காரிலோ அல்லது வீட்டின் முகப்பிலோ உரிமையாளர்கள் வைத்து விட்டால், கார் திருடவருபவர்கள் வீட்டினுள் நுழைந்து திருடுவது தடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர் காவல்துறையினர்.
காவல்துறையினரின் இந்த வினோத அறிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், சமூக ஊடக தளங்களில் சீற்றத்தை தூண்டியுள்ளது. சமூகவளைதளங்களில், சிலர் “இந்த அறிக்கை பைத்தியகாரத்தனமானது, இது கார் திருட்டை மேலும் அதிகரிக்கும்” என்று கூறிவருகின்றனர்.