ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார்.
இதனால் தினமும் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.
ரேடியோ-கனடாவுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது- அரசியலில் இருந்து விலகுவது பற்றி தினமும் யோசிக்கிறேன். ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் தினமும் வருகிறது.
நான் செய்வது கிறுக்குப்பிடிக்கவைக்கும் வேலை (crazy job). தனிப்பட்ட தியாகம் செய்ய வேண்டும். நிச்சயமாக, இது மிகவும் கடினம், சில நேரங்களில் அது நன்றாக இல்லை.” என்று கூறியுள்ளார்
ட்ரூடோ தனது மனைவி சோஃபியை (Sophie Grégoire Trudeau) ஆகஸ்ட் 2023-இல் பிரிந்தார்.
திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
ட்ரூடோவின் புகழ் குறைந்தது
கனடாவின் 23வது பிரதமராக ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ நவம்பர் 2015ல் பதவியேற்றார். ஏப்ரல் 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
கனடாவில் 2025 அக்டோபரில் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னதாக அங்கு பிரதமருக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வுகளில் ட்ரூடோ மிகவும் பின்தங்கியுள்ளார். அவரது புகழ் குறைந்து வருவதாக தெரிகிறது. அவரது லிபரல் கட்சியும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின்தங்கியுள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் அரசியலில் இருந்து விலகுவது குறித்து குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அடுத்த தேர்தல் வரை பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.