தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 9ஆவது முறையாக சம்மன்
கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 9ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது. கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது அமலாக்கத்துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இன் கீழ் இதுவரை 8 அழைப்பாணைகளை அமலாக்க இயக்குநரகம் அனுப்பியுள்ளது.
ஆனால், இந்த அழைப்பாணைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தவிா்த்துவிட்டாா்.
இந்நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடக் கோரி அமலாக்க இயக்குநரகம் தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, நடைபெற்ற வழக்கின் விசாரணையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானாா். அப்போது, ‘மாா்ச் முதல் வாரம் வரை தில்லி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெறவிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேஜரிவால் கோரிக்கை வைத்தாா்.
இதை ஏற்ற நீதிமன்றம், மாா்ச் 16-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. இதனிடையே, மீண்டும் சனிக்கிழமை நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில் நேரில் ஆஜராகிய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா,நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டா்.