அதிபர் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
“சிறிலங்கா அதிபர் புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஏப்ரல் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடியில் உள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தரம் 1 முதல் தரம் 11 வரை பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபர் நிதியம் கோரிக்கை
இந்த திட்டம் தொடர்பில் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பெற்றோர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விண்ணப்பப் படிவத்தை பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு அதிபர் நிதியம் கோரியுள்ளது.
பாடசாலைகளால் தெரிவு செய்யப்படும் தகுதியான புலமைப்பரிசில் பெறுவோரின் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை கல்வி அமைச்சு அதிபர் நிதியத்திற்கு அனுப்பிய பின்னர், இந்தப் புலமைப் பரிசில் தொகைகள் 2024 ஏப்ரல் முதல் அடுத்த 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.
360 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி, தரம் 1 முதல் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், முழுத் திட்டத்திற்கும் அதிபர் நிதியத்தினால் 360 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.