உள்நாட்டு நிறுவனங்களுக்கான முன்னுரிமை சலுகை ரத்து
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னைய அரச நிர்வாகம் வழங்கிய முன்னுரிமை சலுகையை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
அரச துறைக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த சலுகையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது சில சந்தை தோல்விகளுக்கு வழிவகுத்தது என்ற அடிப்படையில் குறித்த சலுகைகளை அமைச்சகம் ரத்துச்செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறப்பு முன்னுரிமை
முன்னைய கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிப்பதற்கு, போட்டி ஏல நடைமுறையின் கீழ் ஏலங்களை சமர்ப்பிக்கும் போது பொது நிறுவனங்களுக்கு சிறப்பு முன்னுரிமையை வழங்குவதற்காக 2020இல் சுற்றறிக்கைகளை வெளியிட்டது.
ஒரு தனி சுற்றறிக்கை, உள்நாட்டு மென்பொருள் மற்றும் வன்பொருள், கட்டுமானம், தளபாடங்கள், அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் தொழில்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்தது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வரும் நிதியமைச்சகம், இந்த சுற்றறிக்கைகளை இரத்து செய்துள்ளது.