;
Athirady Tamil News

வெடுக்குநாறி மலை விவகாரத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னனி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்க தயார்: கஜேந்திரன் எம்.பி

0

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு நேற்று (17.03.2024) விஜயம் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய சட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு எதிராக புதிது புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு கைது செய்யப்படுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

இதுவே வெடுக்குநாறி விடயத்திலும் நடந்தது. பொய் குற்றச்சாட்டுக்களை போட்டு அவர்களை இன்று சிறை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகள் மீளப் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்கின்ற ஒரு அமைப்பு நாடாளுமன்றத்தை தமிழ் பிரதிநிதிகள் பகிஸ்கரிக்க வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு கலந்துரையாடியதன் பிரகாரம் எமது கட்சி உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம்.

அதன் அடிப்படையில் அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி பூரண ஆதரவை வழங்குவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிடம் தெரிவித்து இருக்கின்றோம். இது தொடர்பில் ஆறு திருமுருகன் அவர்களோடும், அகத்தியார் அடிகளாருடனும் பேசி அந்த முடிவுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து இருக்கிறோம்.

இலங்கை பொருளாதார நிலைமை
எனினும் 19ஆம் 20 ஆம் திகதிகளில் நியாயப்பாடுகள் இல்லாமல் பக்கச் சார்பாக செயற்படுகின்ற சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு வருகின்றது.

இருபதாம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. ஆகவே, இந்த நாடாளுமன்ற அமர்வுக்கு செல்லாமல் பகிஸ்கரித்தால் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போகும். அங்கு எதிர்த்து வாக்களிக்க முடியாமல் போகும் நிலைமையும் உருவாகும்.

இது தொடர்பில் அழைப்பு விடுத்த ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

அதுக்கும் அப்பால் ஜனாதிபதியை பாதுகாப்பதற்கும், இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதனை மூடி மறைப்பதற்கும், இலங்கை பொருளாதார நிலைமையில் இருந்து காப்பாற்றுவதாக கூறி சர்வதேச நாணய நிதியத்திற்காக அரசோடு ஒட்டியதுடன், அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை என தெரிவித்து இதற்கு முன்பு செயற்படும் அமைப்புக்கள் இன்று இவர்கள் பற்றி பேசுகிறது.

அந்த சந்திப்பு அவர்களது விடுதலையை சாத்தியமாக்குமாக இருந்தால் அது தொடர்பாக நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. இவர்களது விடுதலைக்கு யார் முயற்சி எடுத்தாலும் நாங்கள் அதற்கு தடையாக இருக்கப் போவதுமில்லை என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.