;
Athirady Tamil News

கொழும்பில் மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் நேற்று சரணடைந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பெருந்தொகை பணமோசடி
கடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தம்பதியினரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இதுவரை 55 இலங்கையர்களை நாட்டை விட்டு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மூவர் உயிரிழப்பு
இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.