‘வேள்வித் திருமகன்’ திருப்பாடுகளின் நாடகம் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது
திருமறைக் கலாமன்றத்தால் அரை நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வருகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையான திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டு ‘வேள்வித் திருமகன்’ என்னும் பெயரில் எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு மாலை 6.45 மணிக்கு இல.238 ,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.
திருமறைக் கலாமன்றம் தனது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான படைப்பாக தயாரித்தளிக்கும் திருப்பாடுகளின் நாடகத்தை ஆண்டுதோறும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.
திருப்பாடுகளின் நாடக மரபில் தனக்கென்றொரு தனித்துவத்தை தக்கவைத்திருக்கும் திருமறைக் கலாமன்றம் இவ்வாற்றுகையை காலத்திற்கேற்ற அரங்க நுட்பங்களை ,சிந்தனைகளை உள்வாங்கி புதிய புதிய பார்வைகளுடன் மேடையேற்றி வந்துள்ளது.இம்முறை மேடையேற்றப்படும் ‘ வேள்வித் திருமகன்’திருப்பாடுகளின் நாடகம் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளிலும் மேடையேற்றப்பட்டது.தற்போது நான்காவது தடவையாக மேடையேற்றப்படுகின்றது.
.
திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ.மரியசேவியர் அடிகளார் திருப்பாடுகளின் நாடகப் பாரம்பரியத்தினை தமிழ் மரபுக்குரிய தனித்துவங்களுடன் வளர்த்து வந்துள்ளார். திருப்பாடுகளின் நாடகத்துக்கான பெரும்பாலான பிரதிகளை நீ.மரியசேவியர் அடிகளாரே எழுதியுள்ளார்.அவரால் இறுதியாக எழுதப்பட்ட பிரதியே’ வேள்வித் திருமகன்’.மரிய சேவியர் அடிகளாரால் எழுதப்பட்ட திருப்பாடுகளின் நாடகப் பிரதிகளில் இருந்து மொழிநடையிலும்,பொருள் அளிக்கையிலும் சற்று மாறுபட்டதாக எழுதப்பட்ட இப்படைப்பு வேள்விக் கருவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழமை போலவே பிரமாண்டமான அரங்க அமைப்பு,காட்சியமைப்பு,இசையமைப்பு,ஒலி,ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும்,அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் ‘வேள்வித் திருமகன்’ அரங்கேறத் தயாராகின்றது.