கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேருந்து சேவை
கிளிநொச்சி கல்மடு நகர் றங்கன் குடியிருப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சேவையானது இன்று (18-03-2024) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடு றங்கன் குடியிருப்பு பகுதியில் இருந்து தினமும் எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இராமநாதபுரம் கிழக்கு அரச தமிழ் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் மேற்கு பாடசாலை, இராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு கற்றல் தேவைகளுக்காக நாளாந்தம் கால்நடையாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சென்று வருகின்றனர்.
இந்த பகுதிக்கான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தருமாறு தொடர்ச்சியாக பிரதேச மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரதேச மாணவர்களின் நன்மை கருதி தனியார் போக்குவரத்து சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.