உயிருடன் ஒப்படைக்கவே விரும்பினேன்., நவால்னியின் மரணம் குறித்து மௌனம் கலைத்த புடின்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக பதிலளித்துள்ளார்.
கைதிகளின் பரிமாற்றத்தின் கீழ் ரஷ்ய சிறையில் இருந்து நவால்னி விடுவிக்கப்பட விரும்பியதாக அவர் கூறினார். எனினும், அதற்குள் அவர் உயிரிழந்ததாகக் கூறினார்.
சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, புடின் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, அலெக்ஸி நவால்னி குறித்து பேசிய அவர், நவல்னியை ஒப்படைத்து, மேற்கத்திய நாடுகளின் சிறைகளில் இருக்கும் சிலரை கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் ரஷ்யாவிற்கு கொண்டு வருவதற்கான யோசனை இருப்பதாக சக ஊழியர்கள் தெரிவித்ததாகவும், இதற்கு தானும் சம்மதித்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். “இது நடக்கும். அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. இதுதான் வாழ்க்கை” என்று புடின் கருத்து தெரிவித்தார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சில நாட்களுக்கு முன்பு சைபீரிய தண்டனைக் காலனி சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.
நவால்னியின் மரணத்திற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. எனினும், அவர் ரஷ்ய அதிபர் புதினால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் அபார வெற்றி பெற்றார். மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. முதற்கட்ட முடிவுகளின்படி புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
24 பிராந்தியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு இது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் ஐந்தாவது முறையாக ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ளார்.