பிரான்சில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்… சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பாரீஸை அமைதியாக வைத்துக்கொள்ள பொலிசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சாலையோரம் தங்கும் வீடற்றோர் ஏராளமானோர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகிலுள்ள, La Courneuve என்னுமிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றை சூழ்ந்துகொண்ட சிலர், பட்டாசுகளைக் கொண்டு பொலிஸ் நிலையம் மீது சரமாரியாகத் தாக்குதல் நிகழ்த்தினார்கள். இந்த தாக்குதல், சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
பின்னணி
விடயம் என்னவென்றால், கடந்த புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் வந்த Wanys R (18) என்னும் இளைஞரை பொலிசார் நிற்குமாறு கூற, அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தாமல் அங்கிருந்து விரைந்துள்ளார்.
பொலிசார் அவரைத் துரத்த, பொலிஸ் வாகனம் மோதியதில் Wanys உயிரிழந்தார், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் காயமடைந்தார்.
உயிரிழந்த Wanys, La Courneuve என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆக, அவர் உயிரிழந்தது தொடர்பில்தான் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
தற்போது, பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.