தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் ராதாகிருஷ்ணன்!
தெலங்கானா ஆளுநராக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி, இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த நியமன ஆணையை வாசித்தார்.
தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் தெலங்கானாவின் மூன்றாவது ஆளுநர் ஆவார். பாஜக வேட்பாளராக கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், கடந்த ஆண்டு ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.
2014ல் தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து நியமிக்கப்பட்ட ஈ.ஸ்.எல்.நரசிம்மன், தமிழிசை சௌந்தரராஜன், ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று ஆளுநர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.