நாட்டில் பாரியளவில் குறைந்துள்ள மதுபான நுகர்வு
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதுபான வரி வருவாய் இலக்கான 232 பில்லியன் ரூபாயை அடைவது சந்தேகத்திற்குரியது என மதுவரித் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் விலையுயர்வு காரணமாக மதுபான நுகர்வு சமீப வருடங்களில் பாரியளவில் குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மதுபான உற்பத்தி கடந்த ஆண்டு 6.5 மில்லியன் லிட்டர் குறைந்துள்ளது.
மதுபான வரி வருமானம்
2022 இல் 26.5 மில்லியன் லிட்டர் மதுபானம் உற்பத்தியானது. எனினும் 2023இல் அது 20 மில்லியன் லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கடந்த வருடத்தில் 29 மில்லியன் 750 மில்லி மதுபான போத்தல்கள் , 54 மில்லியன் 375 மில்லி போத்தல்கள் மற்றும் மிகவும் பிரபலமான 180 மில்லி போத்தல்கள் விற்பனை 115 மில்லியனால் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மதுபானங்களிலிருந்து அறவிடப்படும் வரி வருமானத்தின் ஆரம்ப இலக்கு 217 பில்லியன் ரூபாவாக நிதியமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டது, பின்னர் அது 181 பில்லியன் ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி
அதேநேரம், இந்த ஆண்டுக்கான புதிய நிர்ணயம் 232 பில்லியன் ரூபாய்களாகும் எனினும் இதனை அடைவது கேள்விக்குறியான விடயம்.
மேலும், ஜனவரி 2023 உடன் ஒப்பிடும்போது, கடந்த ஜனவரியில் மொத்த மதுபான உற்பத்தி 657,000 லிட்டரால் குறைந்துள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.