;
Athirady Tamil News

அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

0

அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரை
”அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அவஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.

மேலும், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் திறைசேரி என்பன இணைந்து மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளன.

தொழில்முறை பயிற்சி
அதன் கீழ், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்வாங்கி, கிராம சேவகர் பிரிவொன்றுக்கு 07 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, NAITA மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை என்பன இணைந்து வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்தவுள்ளன. அங்கு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகை செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கடற்றொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர்-நன்னீர் கடற்றொழில் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் அட்டை உற்பத்தி
மேலும் கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. கடற்றொழில் படகுகள் உள்ளிட்ட கடற்றொழில் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும்.

மேலும், பனை, கித்துள், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட “கள்ளு அனுமதி” வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கி​லேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், சீனாவின் சோங்சிங் பிராந்தியத்தில் உள்ள 33 தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திடவும் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனூடாக ஒரு இலட்சம் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாகவும், இத்திட்டங்களின் மூலம் 03 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை வலுவூட்ட எதிர்பார்த்திருக்கிறோம்.” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.