யாழில். மாணவர்களை அயல் பாடசாலைகளில் சிரமதானத்தில் ஈடுபடுத்திய விவகாரம் – அதிபருக்கு எதிராக விசாரணை
யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது.
போட்டி நாட்களில் மாணவர்கள் உற்சாகமாக வீதிகளில் பாண்ட் வாத்தியம் இசைத்து ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் போது அயலில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்து , அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிபர் , பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து, பிள்ளைகளுடன் அயல் பாடசாலைகளுக்கு சென்று சிரமதான பணிகளில் ஈடுபடுங்கள் என பணித்துள்ளார்.
அதிபரின் பணிப்புரையை ஏற்று பெருமளவான பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சென்று அயல் பாடசாலைகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
அதிபரின் செயற்பாடு குறித்து வடமாகாண கல்வி பணிமனைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து , வலய கல்வி பணிமனை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.