தில்லியில் போராட்டம்: அமைச்சர் சௌரப் பரத்வாஜ் உள்பட பலர் கைது!
கலால் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் சௌரப் பரத்வாஜ், அமைச்சர் அதிஷி உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலைமையகம் அருகே ஐடிஓவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறினர்
ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இரு கட்சிகளின் தலைமையகம் அமைந்துள்ள பண்டித் தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்திலிருந்து பாஜக அலுவலகம் செல்லும் சாலையில் தடுப்பு வேலியையும் அமைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதிக்கு வருபவர்களின் அடையாள அட்டைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.
வியாழக்கிழமை மாலை கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.