இளவரசி கேட் குறித்த போலியான செய்திகளை பரப்புவதே பிரித்தானியாதான்: புடின் அலுவலர் குற்றச்சாட்டு
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குறித்த போலியான செய்திகளை பரப்பி வருவது பிரித்தானியாதான் என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
போலிச் செய்திகளைப் பரப்பும் பிரித்தானியா
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான மரியா (Maria Zakharova) என்பவர், இளவரசி கேட் குறித்த போலியான செய்திகளையும், வதந்திகளையும் உருவாக்குவது பிரித்தானியாதான் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவிலும், ராஜ குடும்பத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள் என்று கூறும் மரியா, ஒரு போலிப் பிரச்சாரத்தை உருவாக்கும் முழுமையான தொழில்நுட்பத்தை நீங்கள் காணமுடியும் என்கிறார்.
ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர், இளவரசி கேட்டின் உடல் நிலை குறித்து விளக்கமளித்தாலோ அல்லது ஒரு தெளிவான புகைப்படத்தைக் காட்டினாலோ போதும், பொதுமக்களை அமைதிப்படுத்திவிட முடியும் என்று கூறும் மரியா, ஆனால், அதை விட்டுவிட்டு, மூன்று மாதங்களாக வதந்திகளைப் பரப்பும் வேலை நடந்துகொண்டிருக்கிறது, உலகம் முழுவதும் போலிச் செய்திகளும் வதந்திகளும் பரவிக்கொண்டிருக்கின்றன என்கிறார்.
தங்கள் விவகாரங்களிலிருந்து திசைதிருப்புவதற்காக…
பிரித்தானிய டேப்ளாய்டு ஊடகங்கள், வேல்ஸ் இளவரசி கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார், அல்லது அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றன, சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த கதைகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
ஒரு மாதம் கடந்து செல்லும், அப்போது, வெளிநாட்டு ஊடகங்கள், உதாரணமாக, ரஷ்ய ஊடகங்கள் போலியான தகவல்களைப் பரப்புகின்றன என்பதற்கு, இந்த கதைகளையே ஆதாரமாக காட்டுவார்கள் பிரித்தானியர்கள் என்கிறார் மரியா.
அத்துடன், அவர்கள் போலிச் செய்திகள் தொடர்பில் இன்னொரு மாநாடு நடத்துவார்கள், நம்மை அதில் பங்கேற்க விடமாட்டார்கள், ஏனென்றால், அவர்கள்தான் போலிச் செய்திகள், போலி தகவல்களுக்கெதிராக செய்யப்படும் பிரச்சாரத்தின் தலைவர்கள் என்று கூறும் மரியா, விடயம் என்னவென்றால், அந்த மாநாட்டுக்கு யார் தலைமை வகிப்பார் தெரியுமா? தங்கள் உள் மற்றும் வெளிவிவகாரங்களிலிருந்து திசைதிருப்புவதற்காக எந்த இளவரசி கேட்டைக் குறித்த செய்திகளை மூன்று மாதங்களாக பரப்பிக்கொண்டிருக்கிறார்களோ, அதே கேட்தான் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பார் என்கிறார்.