சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் கருத்து! பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்த உத்தரவு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவினால் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும். நீதிமன்றத்தால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தான் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மைத்திரியின் கருத்து
தனது ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி நேற்று (22) கண்டியில் நடைபெற்ற மத நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.
இதன்போது ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டைப் பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றது என்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் தான் தகவலை வெளியிடும்போது அதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.