தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி : எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது! சுமந்திரன்
தமிழரசுக் கட்சிக்குள் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. கட்சி விவகாரங்களில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அது தொடரும் என நினைக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
75 வருடம் பழைமை வாய்ந்த எமது கட்சிக்கு வரலாற்றில் முதல் தடவையாகத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சில மூத்த தலைவர்கள் மாத்திரமே பொதுவாக முடிவுகளை எடுத்துவந்த நிலையில், எங்கள் எல்லா மாவட்டங்களிலிருந்தும் கட்சிப் பிரதிநிதிகள் கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்த காரணத்தினாலேயே இவ்வாறானதொரு போட்டிக்கு நான் ஆதரவு தெரிவித்தேன்.
இதற்கமைய தேர்தலை நடத்தி நாம் அதில் வெற்றியும் கண்டோம். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தேர்தலில் வெற்றி பெறுவதில் எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது.
உட்கட்சி ஜனநாயகம் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். கட்சிக்குள் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
கட்சி விவகாரங்களில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அது தொடரும் என நினைக்கிறேன். எனது அரசியல் ஈடுபாட்டின் அடிப்படையில் இதனை ஒரு பின்னடைவாக நான் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.