எரிந்த காருக்குள் கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு
எரிந்த காரொன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள தண்ணீர் வற்றிய ஏரியில் கார் ஒன்று இருந்துள்ளது.இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த எரிந்த காருக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் இருந்ததை கண்டுள்ளனர்.
காவல்துறைக்கு தகவல்
இதனையடுத்து மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரில் இருந்த இலக்கத் தகட்டை வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், தட்சிண கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ரஃபீக் என்பவரின் பெயரில் அந்த கார் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும்
ஆனால், இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த காருக்குள் இருந்த சடலங்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.