கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் (23.03.2024) நலன்புரிச் சங்கத்தின் பொதுச் சபை கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் போது வைத்தியசாலை பணிப்பாளர் யாப்பு விதிமுறைகளுக்கு மாறாக 200இற்கு மேற்பட்ட பொதுச் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு கூட்டத்தை இடைநிறுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளனர்.
பணிப்பாளர் தொடர்பிலான முறைப்பாடு
நலன்புரிச் சங்கத்தின் யாப்பின் பிரகாரமும், பொதுச் சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானங்களின் படியும் கூட்டத்தை நடாத்துமாறு பெரும்பான்மை பொதுச் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதும் அவற்றை கருத்திற்கொள்ளாது தன்னிச்சையாக கூட்டத்தை நிறுத்தியமை, வைத்தியசாலை பணிப்பாளர் நலன்புரி சங்கம் தொடர்பில் தனது வரம்பை மீறி செயற்பட்டிருக்கின்றார் என்பதனை சுட்டிகாட்டியே முறையிடவுள்ளதாக பொதுச் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மண்டப வாடகை, சிற்றூண்டி உணவு என மூன்றரை இலட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டுள்ள கூட்டத்தை தன்னிச்சையாக நிறுத்தி, நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிதி வீண் விரையமாவதற்கும் வைத்தியசாலை பணிப்பாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.