முதல் பட்டியலின தலைவர்: ஜேஎன்யு தேர்தலில் இடதுசாரி மாணவர்கள் மாபெரும் வெற்றி!
தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர் தனஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில், இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஐக்கிய இடது கூட்டணி மற்றும் ஆர்எஸ்எஸின் ஏபிவிபி அமைப்பினர் போட்டியிட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜேஎன்யு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இடது கூட்டணியின் வேட்பாளர் தனஞ்சய் 2,598 வாக்குகள் பெற்று ஏபிவிபி வேட்பாளர் அஜ்மீரை(1,676 வாக்குகள்) தோற்கடித்தார்.
கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஜேஎன்யு மாணவர் சங்க தேர்தலில், முதல் பட்டியலின தலைவர் என்ற வரலாற்றை தனஞ்சய் உருவாக்கியுள்ளார்.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கத்தின் வேட்பாளர் அவிஜித் கோஷ், ஏபிவிபி வேட்பாளர் தீபிகா சர்மாவை தோற்கடித்துள்ளார்.
இடது கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் சங்கத்தின் ப்ரியன்ஷி ஆர்யா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், முதல் பட்டியலின பொதுச் செயலாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில், 5,600-க்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.