சாலை மறியலில் முருகன், அண்ணாமலை!
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவினருக்கு காலை 10 மணிக்கும், அதிமுகவினருக்கு 11 மணிக்கும் காவல்துறையினர் நேரம் ஒதுக்கி இருந்தனர். பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இரு கட்சித் தொண்டர்களும் மாறிமாறி கோஷமிட்டனர்.
பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்தவுடன் ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவலர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்க முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது. தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.