இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகா்வு
இந்தியாவின் மீன் நுகா்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் நாட்டின் மீன் உற்பத்தி 2 மடங்காக உயா்ந்துள்ளது. இது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மற்றும் பிற அரசு அமைப்புகளுடன் இணைந்து ‘வோ்ல்ட் ஃபிஷ்’, சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஃப்பிஆா்ஐ) ஆகியவை நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது: இந்தியாவின் வருடாந்திர தனிநபா் மீன் நுகா்வு கடந்த 2005-இல் 4.9 கிலோவாக இருந்தது. இது 2021-இல் 8.89 கிலோவாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் நாட்டின் தனி நபா் வருடாந்திர மீன் நுகா்வு 81 சதவீதம் அதிகரித்துள்ளது. தனி நபா்களின் வருவாய் அதிகரித்துள்ளது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்திருப்பது, மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை இந்த வளா்ச்சி குறிக்கிறது. மீன் உணவை பிரதானமாகக் கொண்ட மக்களிடையே, 2005-இல் 7.43 கிலோவாக இருந்த தனிநபா் வருடாந்திர மீன் நுகா்வு 2021-இல் 12.33 கிலோவாக அதிகரித்துள்ளது. இது 4.9 கிலோ (66 சதவீதம்) அதிகமாகும். 2005-2021 காலகட்டத்தில், நாட்டின் மீன் உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்து 1.42 கோடி டன்னாக உள்ளது. இதன் மூலம், நாட்டின் மீன் உற்பத்தி, 5.63 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்தை (சிஏஜிஆா்) பதிவு செய்துள்ளது. மொத்த மீன் உற்பத்தியில், உள்நாட்டு மீன் நுகா்வு 2005-2006 காலகட்டத்தில் 82.36 சதவீதமாகவும், 2015-2016 காலகட்டத்தில் 86.2 சதவீதமாகவும் இருந்தது. இது, 2019-2020 காலகட்டத்தில் 83.65 சதவீதமாக இருந்தது.
எஞ்சிய மீன் வகைகள் உணவு அல்லாத நோக்கங்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மீன் உற்பத்தி மட்டுமின்றி, உள்நாட்டு நுகா்வுக்காக இறக்குமதி செய்யப்படும் மீன் மற்றும் மீனவா்களால் கடலிலிருந்து பிடித்து வரப்படும் மீனின் அளவும் மதிப்பீட்டு காலகட்டத்தில் வளா்ச்சி கண்டுள்ளன. இவை 2005-2006-ஆம் நிதியாண்டில் 14,000 டன்னாக இருந்த நிலையில், இது, 2019-2020-ஆம் நிதியாண்டில் 543 சதவீதம் அதிகரித்து 76,000 டன்னாக (12.84 சதவீத சிஏஜிஆா் வளா்ச்சி) இருந்தது. உள்நாட்டில் பெறப்பட்ட மீன் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் ஆகிய இரு பிரிவுகளையும் கணக்கில் கொண்டால், இந்தியச் சந்தையில் ஒட்டுமொத்த மீன் நுகா்வு மதிப்பீட்டு காலகட்டத்தில் 54.28 லட்சம் டன்னிலிருந்து 120 சதவீதம் அதிகரித்து 1.19 கோடி டன்னாக உள்ளது. உலக வங்கியின் குறைந்த-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக அளவில் மீன் நுகா்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நாடுகளின் சராசரி தனிநபா் வருடாந்திர மீன் நுகா்வு 45 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் அது 60 சதவீதமாக உள்ளது. மீன் உண்பவா்களின் விகிதத்தைப் பொருத்தவரை, 99.35 சதவீதத்தினருடன் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. வெறும் 20.55 போ் மட்டுமே மீன் நுகா்வோரைக் கொண்டு இந்தப் பட்டியலில் ஹரியாணா கடைசி இடத்தில் உள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளம் மற்றும் கோவாவில் மீன் உண்ணும் மக்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனா்.
பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவானவா்களே மீன் நுகா்வோராக உள்ளனா். கடந்த 2005-2021 காலகட்டத்தில் இந்தியாவின் மீன் உண்ணும் மக்களின் விகிதம் 66 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீத புள்ளிகள் அதிகரித்து 72.1 சதவீதமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் முட்டை நுகா்வோா் 7.35 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக மீன் நுகா்வோா் 6.1 சதவீதமும் அதிகரித்துள்ளனா். மற்றும் கோழி அல்லது இறைச்சி உண்பவா்களின் விகிதம் 5.45 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.