பிரதமர் இல்லம் சுற்றி 144 தடை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது!
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
அவரை மாா்ச் 28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில், ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காப்போம் என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் இன்று(மார்ச். 26) புதுதில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லம் அருகேவுள்ள படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படேல் செளக் மெட்ரோ ரயில் நிலையம் வந்த பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்ஜோத் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அனைத்து ஆம் ஆத்மி தொண்டர்களும் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை காவல்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.