பெண்கள் தான் டார்கெட்.. மொத்தம் 18; சிக்கிய 63 முதியவர் – அதிர்ச்சி சம்பவம்!
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர் திருட்டு
சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
மேலும், கடந்த 10-ம் தேதி அங்கு நிறுத்தப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என கவிதா என்ற பெண்ணும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கண்காணித்தனர்.
அதில், முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து ரயில் நிலையம் அருகே காத்திருந்த போலீசார், திருட வந்த திருடரை கையும் களவுமாக பிடித்தனர்.
முதியவர் கைது
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த முதியவரின் பெயர் இளங்கோ(63) என்பதும், அவர் வேளச்சேரி விஜயநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் கையில் ஏராளமான சாவிக்கொத்தினை எடுத்து வந்து ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் பெண்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியுள்ளார்.
சாவிகளை பயன்படுத்தும்போது எந்த வண்டியின் லாக் திறக்கிறதோ, அதனை எடுத்துச் சென்று மவுண்ட் ரோட்டில் மெக்கானிக் கடையில் ரூ.3000க்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், சில வாகனங்களை சிந்தாரிபேட்டை, புதுப்பேட்டையிலும் நம்பர் பிளேட்டுகளை மாற்றி விற்றுள்ளார்.
இந்நிலையில் அந்த முதியவரிடம் இருந்து 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.