இலங்கை பிரதமர் மற்றும் சீன பிரதமர் தலைமையில் புதிய 09 ஒப்பந்தங்களில் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (2024.03.26) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
புதிய அத்தியாயம்
பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, பொருளாதார ஒத்துழைப்புடன் சமூக, கலாசாரம், கல்வி மற்றும் விவசாயத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தூய்மையான எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு திறனை ஆராய்வதற்கு இரு தரப்பும் பரஸ்பர அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனா ஊக்குவிப்பு
மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகமான நிறுவனங்களை சீனா ஊக்குவிப்பதுடன், இலங்கையின் தரமான பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும், சீன நிறுவனங்களுக்கு நல்ல வர்த்தக சூழலை இலங்கை வழங்க முடியும் என நம்புவதாக சீன பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு நீண்டகால ஆதரவை வழங்கியதற்காகவும், கொரோன வைரஸ் தொற்றுப் பரவல் மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவியமைக்காகவும் சீனாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.