பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ சோதனை!
பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த சம்பவம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ் காயமடைந்தனா். இந்த சம்பவத்தை நடத்திய தீவிரவாதி மற்றும் அவரது கூட்டாளி சென்னையில் தங்கியிருந்தது என்.ஐ.ஏ. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கண்டறிந்தது எப்படி?
பெங்களூரு குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து மா்ம நபா் ஒருவா், சில நிமிஷங்களுக்கு முன்பு வெளியேறியதைக் கண்டறிந்த என்ஐஏ அதிகாரிகள், பல நூறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்துக்கு செல்லும் அந்த நபா், தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி துப்பு துலக்கியதில் பல அதிா்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அந்தத் தொப்பி, சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடையில் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், அந்தத் தொப்பியை அணிந்திருந்த நபா், கா்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சோ்ந்த முஸாவிா் ஹூசைன் ஷாஜிப் என்பவது தெரியவந்தது. கா்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்களை சோ்த்ததாக என்ஐஏ கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கில், முஸாவிா் தேடப்பட்டு வருகிறாா். மயிலாப்பூரில் குறிப்பிட்ட கடையில் நடத்திய விசாரணையிலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் அந்தத் தொப்பியை ரூ. 400-க்கு முஸாவிா் கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அவா்கள் இருவரும் பயன்படுத்திய கைப்பேசி, சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஆகியவற்றை கொண்டு விசாரித்ததில், கடந்த ஜனவரி 2-ஆவது வாரத்தில் இருந்து பிப்ரவரி 2-ஆவது வாரம் வரை இருவரும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.