அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், சரக்கு கப்பலொன்று பால்டிமோர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் சேதங்கள் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்ட நிலையிலேயே, தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சிஸ் ஸ்கொட் என்ற 3 கிலோமீற்றர் நீளமான இந்த பாலத்தின் ஒரு பகுதி மீது சரக்கு கப்பலொன்று நேற்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மீட்பு பணிகள்
கப்பல்கள் மற்றும் உலங்குவானுர்திகள் இந்த மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், காணாமல் போன ஆறு பேர் உயிரிழந்திருக்கலாமென நம்பப்பட்டதையடுத்து, தேடுதல் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
கடலின் வெப்பநிலை, ஆழம் மற்றும் காணாமல் போனோர் மூழ்கியிருந்த நேரத்தை அடிப்படையாக கொண்டு தேடுதல் பணி கைவிடப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஷானன் கில்ரேத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தை மீண்டும் புனரமைக்கும் பணிகளுக்கான முழு செலவையும் அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமென ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.