வறுத்தலைவிளான் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுத்தலைவிளான் (வீமன்காமம்) பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணிகள் மக்கள் பாவனைக்காக இன்று (27) விடுவிக்கப்பட்டன.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வறுத்தலைவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 23 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
21 குடும்பங்களுக்கு சொந்தமான 23 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை கையளித்திருந்தார்.
இதற்கமைவாக, காணிகளில் தங்கியிருந்த இராணுவத்தினர், அங்கிருந்த தமது தளபாடங்களை அகற்றிய நிலையில், இன்று வௌியேறிச் சென்றனர்.
விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்காக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை மக்களின் காணியில் உள்ள வீட்டு உடமைகளை திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்த காணி விடுவிப்புடன் வறுத்தலைவிளான் கிராமம் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருகட்டங்களாகவும் தற்போது மீதியாக இருந்த பகுதி விடுவிப்புடன் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.