நம் வாழ்நாளில் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்: எச்சரிக்கும் நிபுணர்
நம் வாழ்நாளிலேயே உலகம் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று கூறும் மருத்துவத்துறை நிபுணர் ஒருவர், அப்படி எதுவும் நிகழாது என்பதுபோல நடந்துகொள்வது அறியாமையே என்கிறார்.
யார் இந்த நிபுணர்?
நம் வாழ்நாளில் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கும் அந்த நபரின் பெயர் தேவி லலிதா ஸ்ரீதர்.
கோவிட் காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு முக்கிய ஆலோசகராக இருந்த தேவி, ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் பல்கலையில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.
எச்சரிக்கை
கோவிட் பெருந்தொற்று என்னும் விடயம் வெளியானதுமே, மருத்துவ உலகம் சலிப்படைந்ததாகவும், உலக நாடுகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளுமோ, பொதுமக்கள் நலனைவிட, அரசியல் ரீதியான விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார் தேவி.
உலகம் இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளும் என்னும் விடயம் தவிர்க்கமுடியாதது என்பதை ஏற்றுக்கொள்ள உலகத்துக்கு விருப்பமில்லாததுபோல் தோன்றுவதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற, பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராவது தொடர்பான, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற சந்திப்பு ஒன்றை நினைவுகூரும் தேவி, அந்த நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தாரர்களேயொழிய, மனித சமுதாயமே அழியும் ஆபத்தான ஒரு நிலையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது என்கிறார்.
கவலைக்குரிய விடயம் என்னவென்றால், பிரித்தானியாவும் அத்தகையவர்களில் கூட்டத்தில் சேர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறும் தேவி, இன்று பிரித்தானியாவில் மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை, ஆம்புலன்ஸ்களுக்காக வெகுநேரம் காத்திருத்தல், மருத்துவர்களை சந்திக்க நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை காணப்படும் நிலையில், எதிர்காலத்தில் உருவாக இருக்கும் அபாயங்களுக்காக முதலீடு செய்யவைப்பது தொடர்பில் வாதங்களை முன்வைப்பது கடினமானதாகிவிட்டது என்கிறார்.
ஆனால், நம் வாழ்நாள் காலத்திலேயே இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ளமாட்டோம் என்பது போல நடந்துகொள்வது அறியாமை, இரண்டையும் செய்ய நிச்சயம் ஒரு வழி ஏற்பாடு செய்துதான் ஆகவேண்டும் என்கிறார் தேவி.