இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை
வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிஙகம் எழுதிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், அரசினால் தற்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படுள்ள பாடசாலை
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்றது.
உண்மையில் அது வரவேற்கத்தக்க விடயம். இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் அரசிடமும், உலக உணவுத்திட்ட அமைப்பிடமும் நாம் முன்வைத்த வேண்டுகோள்
செவிசாய்க்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்படுகின்றமை
நன்றியுடன் பாராட்டப்படவேண்டிய விடயம்.
ஆனாலும் உடல், உளச் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுகின்ற வயதை உடைய,
பாடச் சுமையில்லாமல் மைதான, களச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இலங்கையின் அதி உச்சமான போட்டிப்பரீட்சையாகக் கருதப்படுகின்ற க.பொ .த. உயர்தர பரீட்சைக்கு முன்னோடியான வகுப்புக்களான தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்புகளில் கற்கும்
மாணவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்.
அவர்களிடத்தே பருவமாற்றம் போன்ற உளவியல் சார்ந்த அம்சங்கள் ஆதிக்கம்
செலுத்துவதால் அவர்களின் போசாக்கு என்பது மிகவும் அத்தியாவசியமானது.
ஆகையால் தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இலவச உணவை
வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை, சுயதொழிலின்மை, வருமானமின்மை
போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அத்தகைய சுமைகள்
உள்ள
மாணவர்களுக்காவது மதிய உணவு வழங்குவதற்கு ஆவன செய்யவேண்டுமென கல்வி
அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்றுள்ளது.